இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் ஆட்டத்திலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பந்தாடி வெற்றிக் கண்டது இங்கிலாந்து.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கான்பூரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் கேப்டன் விராட் கோலியும், கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ராகுல் 8 ஓட்டங்களில் அவுட்டாக, விராட் கோலி 26 பந்துகளில் 29 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார்.

இதையடுத்து சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்தார் யுவராஜ் சிங். இந்த ஜோடி 20 ஓட்டங்களே எடுத்தது. பிளங்கெட் பந்துவீச்சில் யுவராஜ் சிங், ரஷித்திடம் கேட்ச் ஆனார். அவர் 13 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்தார்.

இதையடுத்து எம்.எஸ்.தோனி களமிறங்க, மறுமுனையில் வேகமாக ஓட்டங்கள் சேர்த்த ரெய்னா, பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்த கையோடு, ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 23 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் வந்த மணீஷ் பாண்டே 3, ஹார்திக் பாண்டியா 9, பர்வீஸ் ரசூல் 5 ஓட்டங்களில் வெளியேற, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது இந்தியா.

தோனி 27 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, நெஹ்ரா வீசிய முதல் ஓவரில் 4 ஓட்டங்கள் சேர்த்தது. பூம்ரா வீசிய 2-ஆவது ஓவரை எதிர்கொண்ட சாம் பில்லிங்ஸ், 3 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் பறக்கவிட, அந்த ஓவரில் மட்டும் 20 ஓட்டங்கள் கிடைத்தன.

மறுமுனையில் ஜேசன் ராயும் அதிரடியில் இறங்க, 3 ஓவர்களில் 36 ஓட்டங்களை எட்டியது இங்கிலாந்து.

இதையடுத்து 4-ஆவது ஓவரை வீச சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சாஹலை அழைத்தார் கோலி. அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரை விளாசிய ஜேசன் ராய், அடுத்த பந்தில் போல்டு ஆனார். அவர் 11 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்ந்து அசத்தலாக பந்துவீசிய சாஹல், அதே ஓவரின் 5-ஆவது பந்தில் பில்லிங்ஸை போல்டாக்கினார். அவர் 10 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தார்.

இதையடுத்து ஜோ ரூட்டுடன் இணைந்தார் கேப்டன் இயான் மோர்கன். ரூட் நிதானமாக ஆட, மறுமுனையில் அதிரடியில் இறங்கிய மோர்கன் 38 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 51 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்க, 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் சேர்த்து வெற்றி கண்டது இங்கிலாந்து.

ஜோ ரூட் 46, ஸ்டோக்ஸ் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியத் தரப்பில் சாஹல் 2 விக்கெட் எடுத்தார். மொயீன் அலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.