India and srilankan second match starts today
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி இன்றுத் தொடங்குகிறது.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக பெரும்பாலும் பாதிக்கப்பட்டு சமன் ஆன நிலையில், இந்தியா - இலங்கை அணிகள் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் 2-வது போட்டியை காண்கின்றன.
இந்தப் போட்டியைப் பொருத்த வரையில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவன் விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முரளி விஜய் அணிக்கு திரும்பியுள்ளார்.
அதேபோல வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு திருமணம் காரணமாக அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இஷாந்த் சர்மா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளார்.
அணியின் பேட்டிங்கைப் பொருத்த வரையில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் முற்றிலுமாகத் தடுமாற, புஜாரா மட்டும் சற்று நிலைத்தார். கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே தங்களது வழக்கமான பணியை சிறப்பாக மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
வேகப்பந்துவீச்சின் மூலம் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் இலங்கை வீரர்களை திணரடிக்க உள்ளனர்.
இலங்கையை பொருத்த வரையில், முதல் போட்டியில் தோல்வி அடையாமல் சமன் செய்துள்ளது அவர்களுக்கு சற்று நம்பிக்கை அளித்திருக்கும். அந்த அணியில் மாற்றம் ஏதும் இல்லை.
மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இலங்கை களம் காணும் பட்சத்தில் விஸ்வா ஃபெர்னான்டோவுக்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த அணியின் பேட்டிங்கைப் பொருத்த வரையில் கடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசிய மேத்யூஸ், திரிமானி பலமாகத் திகழ்கின்றனர்.
அணிகள் விவரம்
இந்தியா:
விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரித்திமான் சாஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், ரோஹித் சர்மா.
இலங்கை:
தினேஷ் சண்டிமல் (கேப்டன்), ஏஞ்ஜெலோ மேத்யூஸ், திமுத் கருணாரத்னே, நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெய டி சில்வா, சுரலங்கா லக்மல், டாசன் சனகா, விஸ்வா ஃபெர்னான்டோ, லாஹிரு கமகே, லக்ஷன் சன்டகன், சதீரா சமரவிக்ரமா, தில்ருவன் பெரேரா, ரோஷன் சில்வா.
