முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா இன்று எதிர்கொள்கிறது.

இலங்கை நடத்திவரும் இந்தத் தொடரில் இந்திய அணி இதுவரை அந்நாட்டு அணியையும், வங்கதேசத்தையும் தலா ஒரு முறை வீழ்த்தியுள்ளது. கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையிடம் இந்திய அணி வீழ்ந்தது. 

முதல் ஆட்டத்திலேயே தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும், தனது இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்திய அணி, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இலங்கையுடன் கடந்த 10-ஆம் தேதி மோதிய வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவுடனான ஆட்டத்தில் தோல்வியுடன் தொடங்கிய வங்கதேசம், பதிலடி கொடுக்கும் வகையில் இன்று விளையாடும்.

கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் டி20 ஆட்டத்தைப் பொறுத்த வரையில் முதலில் பேட்டிங் செய்த அணியும், முதலில் பந்துவீசிய அணிகளும் தலா 15 முறை வெற்றி பெற்றுள்ளன. 

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் 19.4 ஓவர்களில் 215 ஓட்டங்கள் எடுத்ததே இந்த மைதானத்தின் அதிகபட்ச ரன்களாக உள்ளது. லீக் சுற்றில் இந்தியாவின் கடைசி ஆட்டம் என்பதால், இன்று நடைபெறவுள்ள ஆட்டம் மிகவும் விறுவிறுப்புடன் இருக்கும். 

ஒருவேளை இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தாலும் இலங்கை - வங்கதேசம் மோதும் கடைசி ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? இல்லையா? என்பது தெரியும்.