ஆமதாபாத்
உலக கோப்பை கபடியில் இன்று நடைபெறும் அரைஇறுதியில் இந்தியா-தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.
3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் ‘ஏ’ பிரிவில் தென் கொரியா தனது 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு முதலிடத்தையும், நடப்பு சாம்பியன் இந்தியா 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடத்தையும் பெற்று அரை இறுதிக்கு முன்னேறின. அந்த பிரிவில் இடம் பிடித்த வங்காளதேசம் (3 வெற்றி, 2 தோல்வி), இங்கிலாந்து (2 வெற்றி, 3 தோல்வி), ஆஸ்திரேலியா (ஒரு வெற்றி, 4 தோல்வி), அர்ஜென்டினா (5 ஆட்டத்திலும் தோல்வி) ஆகிய அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.
‘பி’ பிரிவில் தாய்லாந்து, ஈரான் அணிகள் தலா 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. கென்யா (3 வெற்றி, 2 தோல்வி), ஜப்பான் (2 வெற்றி, 3 தோல்வி), போலந்து (2 வெற்றி, 3 தோல்வி), அமெரிக்கா (5 ஆட்டத்திலும் தோல்வி) ஆகிய அணிகள் லீக் சுற்றோடு நடையை கட்டின.
இன்று (வெள்ளிக்கிழமை) அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. முதலாவது அரைஇறுதியில் தென் கொரியா-ஈரான் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. 2-வது அரைஇறுதியில் இந்தியா-தாய்லாந்து (இரவு 9 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முன்னதாக கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய தாய்லாந்து அணி 37-33 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானை வீழ்த்தி முதல் முறையாக அரைஇறுதியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
போட்டி குறித்து தாய்லாந்து கேப்டன் கோம்சன் தோங்கம் கருத்து தெரிவிக்கையில், ‘இந்தியாவை போன்று ஒரு வலுவான அணி ஈரான். லீக் சுற்று ஆட்டத்தில் ஈரான் அணிக்கு எதிராக நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். அந்த தவறுகளை இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் செய்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்திய அணிக்கு நாங்கள் கடும் சவால் அளிப்போம்’ என்றார்.
இந்திய அணி கேப்டன் அனுப்குமார் கூறுகையில், ‘தவறுக்கு இடம் கொடுப்பது நல்ல விஷயமல்ல. அதுவும் அரை இறுதியில் தவறு இழைத்தால் போட்டியை விட்டு வெளியேற வேண்டியது தான். தென் கொரியாவுக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் நாங்கள் தவறுகள் செய்து விட்டோம். அதனை மீண்டும் செய்யாமல் பார்த்து கொள்வோம்’ என்றார்.
இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் கே.பாஸ்கரன் கூறும் போது, ‘தாய்லாந்துக்கு எதிராக எங்களது மிகக் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
