இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கையின் பல்லகெலேவில் இன்று நடைபெறுகிறது.

முதல் ஒரு நாள் ஆட்டத்தில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக் கண்ட இந்திய அணி, இந்த ஆட்டத்தில் மிகுந்த உற்சாகத்தோடு களமிறங்குகிறது.

ஆனால், இலங்கை அணி தொடர் தோல்வியினால் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியோடு களம் காணுகிறது.

இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது. தொடக்க வீரர் ஷிகர் தவன், ரோஹித் சர்மா போன்றோர் பெரிய அளவில் ரன் குவிக்க முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் விராட் கோலி, கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், பாண்டியா கூட்டணி பலம் சேர்க்கிறது.

வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், பாண்டியா கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் அக்ஷர் படேல், யுவேந்திர சாஹல், கேதார் ஜாதவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இலங்கை அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் தடுமாறி வருகிறது. பேட்டிங்கைப் பொறுத்தவரையில் நிரோஷன் டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா, குஷல் மென்டிஸ் ஆகியோரும், மிடில் ஆர்டரில் கேப்டன் உபுல் தரங்கா, மேத்யூஸ், கபுகேதரா போன்ற பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், அவர்கள் யாரும் தொடர்ச்சியாக ரன் குவிக்காதது கவலையே.

ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா, வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மலிங்கா, விஸ்வா பெர்னாண்டோ ஆகியோரையே நம்பியுள்ளது இலங்கை. சுழற்பந்து வீச்சாளர்களில் சன்டாகன் ஆகியோர் உள்ளனர்.

இலங்கை பந்துவீச்சாளர்களால் கடந்த ஆட்டத்தில் இந்தியாவின் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்த முடியவில்லை என்பது கொசுறு தகவல்.