இந்தியா - இலங்கை அணிகளுக்கு டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இலங்கையின் காலே நகரில் இன்று தொடங்குகிறது.

காலே மைதானத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையுடனான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் 176 ஓட்டங்கள் என்ற இலக்கை எட்டும் முயற்சியில், 112 ஓட்டங்களில் வீழ்ந்தது இந்தியா. அதற்கு பதிலடி தரும் வகையில் இந்த ஆட்டத்தில் இந்தியா விளையாடும்.

அப்போதைய நிலையுடன் ஒப்பிடுகையில் கேப்டன் கோலியும், இந்திய அணியினரும் ஆட்டத்தில் தேறியுள்ளனர். 2015-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரின்போது இந்திய அணியின் இயக்குநராக இருந்த ரவி சாஸ்திரி, தற்போது அணியின் தலைமை பயிற்சியாளராகியுள்ளார். எனவே, வெற்றி வாய்ப்புகள் இந்தியாவுக்கு அதிகமுள்ளது.

இந்திய அணியைப் பொறுத்த வரையில், தொடக்க வீரராக களம் காண இருந்த கே.எல்.ராகுல் வைரஸ் காய்ச்சல் காரணமாக, முதல் ஆட்டத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளார்.

எனவே, ஷிகர் தவன்-அபினவ் முகுந்தை தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி களம் காணலாம். அவர்களைத் தொடர்ந்து சேதேஷ்வர் புஜாரா, கோலி, ரஹானே களம் காணலாம்.

ரோகித் சர்மாவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்புள்ளது. இறுதியாக, இந்தூரில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அவர் களம் கண்டிருந்தார்.

பந்துவீச்சாளர்களைப் பொறுத்த வரையில், இது சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு 50-ஆவது டெஸ்ட் போட்டியாகும். 5 பந்துவீச்சாளர்களுடன் விளையாட கோலி முடிவு செய்யும் பட்சத்தில், குல்தீப் யாதவும் களம் காணலாம்.

வேகப்பந்துவீச்சில் முகமது சமி, உமேஷ் யாதவ் களத்தில் இருப்பர்.

இலங்கை அணியைப் பொறுத்த வரையில், புதிய கேப்டன் தினேஷ் சண்டிமல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், சுழற்பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் தலைமையில் அந்த அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.

இன்றைய ஆட்டம் காலை 10 மணிக்கு தொடங்கும்.