India equivalent to Australia The next game because it took heated
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் தொடர்கின்றன.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. மொத்தம் 137.3 ஓவர்களை சந்தித்த அந்த அணி, அனைத்து விக்கெட் இழப்புக்கு 451 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 361 பந்துகளை சந்தித்து 17 பவுண்டரிகளுடன் 178 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய தரப்பில் ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய இந்திய அணி, 210 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 603 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
அணியில், அற்புதமாக ஆடி ரன்களை குவித்த புஜாரா - சாஹா ஜோடி, 7-ஆவது விக்கெட்டுக்கு 199 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை படைத்தது. இதில் 525 பந்துகளை சந்தித்த புஜாரா, 21 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதம் கடந்து 202 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
சதம் கடந்த ரித்திமான் சாஹா, மொத்தம் 233 பந்துகளுக்கு 8 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 117 ஓட்டங்கள் எடுத்து வீழ்ந்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் பட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 152 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா முதலில் தடுமாறியது. 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 23 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
பின்னர் கடைசி நாளான நேற்று தடுப்பாட்டம் ஆடிய அந்த அணியில், ரென்ஷா 15, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஷான் மார்ஷ் - ஹேண்ட்ஸ்காம்ப் இணை 5-ஆவது விக்கெட்டுக்கு 124 ஓட்டங்கள் சேகரித்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 126 பந்துகளிலும், ஷான் மார்ஷ் 190 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர்.
இந்த நிலையில், 53 ஓட்டங்கள் எடுத்திருந்த ஷான் மார்ஷ், ஜடேஜா பந்துவீச்சில் முரளி விஜயிடம் கேட்ச் ஆனார்.
அதனைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் 2 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மேத்யூ வேட் களத்துக்கு வந்தார்.
ஆட்டநேர முடிவில் 100 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. ஹேண்ட்ஸ்காம்ப் 72, வேட் 9 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்தியத் தரப்பில், ஜடேஜா 2 விக்கெட், அஸ்வின், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக, 202 ஓட்டங்கள் விளாசிய புஜாரா அறிவிக்கப்பட்டார்.
