ஆக்கி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவும், சீனாவும் இன்று மாலை 5 மணிக்கு மோதுகின்றன.

பெண்களுக்கான 4-வது ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் வெள்ளிக்கிழமை நடந்த கடைசி லீக்கில் இந்தியா - சீனா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 57-வது நிமிடம் வரை 2-2 என்ற கணக்கில் சமநிலை நீடித்தது.

இந்திய அணியில் பூனம் ராணி, வந்தனா கோல் அடித்தனர்.

ஆட்டம் முடிய 2 நிமிடம் இருக்கையில் சீனாவின் ஜிஸியாவ் கோல் அடித்து வெற்றியை தட்டிப்பறித்தார்.

முடிவில் 2-3 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது.

லீக் முடிவடைந்த நிலையில் புள்ளி பட்டியலில் சீனா 9 புள்ளிகளுடன் முதலிடமும் (3 வெற்றி, ஒரு தோல்வி), இந்தியா 7 புள்ளிகளுடன் 2-வது இடமும் (2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - சீனா அணிகள் மீண்டும் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கும்.