பந்தை தவறாக கணித்தது அல்லது ஷாட்டை தேர்வு செய்ததே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் இறந்ததற்கு காரணம் என அவருடைய மரணம் குறித்து விசாரணை நடத்திய நியூ செளத் வேல்ஸ் நீதிபதி மைக்கேல் பர்ன்ஸ் தெரிவித்தார்.

2014 நவம்பரில் சிட்னி மைதானத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடியபோது வேகப்பந்து வீச்சாளர் சீன் அபாட் வீசிய அதிவேக பவுன்சர், ஹியூஸின் கழுத்தில் தாக்கியது.

இதனால் அவருடைய மூளையில் உள்ள இரத்த குழாய் வெடித்ததில் சுயநினைவை இழந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹியூஸ், நவம்பர் 27-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹியூஸின் மரணம் குறித்து விசாரணை நடத்திய மைக்கேல் பர்ன்ஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பந்தை தவறாக கணித்தது அல்லது ஷாட்டை தேர்வு செய்ததில் நிகழ்ந்த தவறின் காரணமாகவே பிலிப் ஹியூஸ் மரணமடைய நேரிட்டது.

பெளலர் திட்டமிட்டு பவுன்சரை வீசினார் என்று சொல்ல முடியாது. அதனால் ஹியூஸின் மரணத்துக்கு பெளலர் மீதோ அல்லது மற்றவர்கள் மீதோ பழிசுமத்த முடியாது' என குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஹியூஸின் மரணம் கிரிக்கெட் உலகையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.