சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், அமெரிக்காவின் ஜான் இஸ்னர், ருமேனியாவின் சைமோனா ஹேலப், ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா ஆகியோர் அசத்தலாக ஆடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் மற்றும் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ மோதினர். இதில், ஜுவான் மார்ட்டினை 6-3, 7-5 என்ற நேர் செட்களில் கிரிகோர் டிமிட்ரோவ் வீழ்த்தினார்.

கிரிகோர் தனது காலிறுதியில் ஜப்பானின் யூச்சி சுகிதாவை சந்திக்கிறார்.

ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் சகநாட்டவரான பாப்லோ கரீனோ பஸ்டாவை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.

டேவிட் ஃபெரர் காலிறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை சந்திக்கிறார் டேவிட் ஃபெரர்.

அமெரிக்காவின் ஜான் இஸ்னர் சகநாட்டவரான பிரான்செஸ் டியாஃபோவை 7-6 (4), 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.

ஜான் இஸ்னர் காலிறுதியில் அமெரிக்காவின் ஜேர்டு டொனால்டுசன்னை சந்திக்கிறார் இஸ்னர்.

மகளிர் ஒற்றையர் 3-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் சைமோனா ஹேலப், லாத்வியாவின் அனாஸ்டாஜியாவை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.

ஹேலப் தனது காலிறுதியில் பிரிட்டனின் ஜோகன்னா கோன்டாவுடன் மோதுகிறார்.

ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா, ஸ்பெயினின் சுவாரெஸ் நவரோவாவை 6-2, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.

ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா காலிறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவுடன் மோதுகிறார்.

போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்ட்டியை 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.