சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இஸ்ரேலின் டூடி செலா அரையிறுதியில் ரஷியாவின் மெத்வதேவை சந்திக்கிறார்.

தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான 22-ஆவது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் 5-ஆவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சர்வதேச தரவரிசையில் 27-ஆவது இடத்தில் இருக்கும் ஆல்பர்ட் ரேமோஸ் 5-7, 4-6 என்ற நேர் செட்களில் 96-ஆவது இடத்தில் இருக்கும் டூடி செலாவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய டூடி செலா, முதல் செட்டின் முதல் கேமிலேயே ரேமோஸின் சர்வீஸை முறியடித்தார்.

முதல் கேமை இழந்த வேகத்தில் ஆக்ரோஷமாக ஆடிய ரேமோஸ் அடுத்த கேமில் டூடி செலாவின் சர்வீஸை பிடிக்க முயன்றார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

இதன்பிறகு 8-ஆவது கேமில் டூடி செலாவின் சர்வீஸை முறியடிக்க கடுமையாகப் போராடினார் ரேமோஸ். ஆனால் அதுவும் தோல்வியில் முடிய, மிகுந்த கோபமடைந்த ரேமோஸ் உரக்கக் கத்தினார்.

தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய ரேமோஸின் கடுமையான போராட்டத்துக்கு 10-ஆவது கேமில் பலன் கிடைத்தது. அதில் டூடி செலாவின் சர்வீஸை முறியடித்த ரேமோஸ், 5-5 என்ற கணக்கில் சமநிலையை எட்டினார்.

ஆனால் அடுத்த கேமில் ரேமோஸின் சர்வீஸை முறியடித்து பதிலடி கொடுத்த டூடி செலா, 12-ஆவது கேமில் தனது சர்வீஸை தன்வசப்படுத்தினார். இதனால் 55 நிமிடங்கள் நடைபெற்ற முதல் செட் 7-5 என்ற கணக்கில் டூடி செலா வசமானது.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் 3-ஆவது கேமில் ரேமோஸின் சர்வீஸை முறியடித்த டூடி செலா, அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்ற, ஆட்டம் 1 மணி, 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் டூடி செலாவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது அவருடைய துல்லியமான ஷாட்கள்தான். குறிப்பாக ஒரு கையில் மிக அற்புதமாக பேக்ஹேண்ட் ஷாட்களை ஆடியது அவருடைய வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது.

சென்னை ஓபனில் 2-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள டூடி செலா, அடுத்ததாக ரஷியாவின் மெத்வதேவை சந்திக்கிறார்.

இதற்கு முன்னர் 2010-ஆம் ஆண்டு அரையிறுதி வரை முன்னேறியுள்ளார் டூடி செலா. சென்னை ஓபனில் இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடியுள்ள டூடி செலாவுக்கு இது 12-ஆவது வெற்றியாகும்.