இந்திய வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுத்தால், இந்திய கால்பந்து அணியின் தரம் உயரும் என்று சென்னையின் எஃப்.சி. அணியின் புதிய பயிற்சியாளர் ஜான் கிரிகோரி தெரிவித்தார்.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளையாடி வரும் சென்னையின் எஃப்.சி. அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரரான ஜான் கிரிகோரி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் நேற்று நடைப்பெற்ற அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் சென்னையின் எப்.சி. அணியின் உரிமையாளர்களான பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், வீட்டா டேனி ஆகியோர் பங்கேற்று புதிய பயிற்சியாளரை அறிமுகம் செய்தனர். அப்போது உதவிப் பயிற்சியாளர் சபீர் பாஷாவும் உடன் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜான் கிரிகோரி கூறியது:

“ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் வெளிநாட்டு வீரர்களை அச்சுறுத்தும் அளவுக்கு இந்திய வீரர்கள் சிலர் அபாரமாக விளையாடுகிறார்கள். பொதுவாகவே ஒரு போட்டியில் வெளிநாட்டு வீரரை களமிறக்குவதா அல்லது இந்திய வீரரை களமிறக்குவதா என சிந்திக்கும்போது, வெளிநாட்டு வீரரே இறுதியில் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்.

ஆனால் ஐஎஸ்எல் போட்டியைப் பொறுத்தவரையில் ஆடும் லெவனில் அதிகபட்சமாக 5 வெளிநாட்டினரே இடம்பெற முடியும். இது மிக நல்ல முடிவாகும். இந்திய வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுத்தால், இந்திய கால்பந்து அணியின் தரம் உயரும்.

ஐஎஸ்எல் போட்டி மிக வேகமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இப்போது உலக அளவில் பிரபலமடைந்துள்ளது. நானும் இப்போது சென்னையின் எஃப்.சி. கிளப்பில் இணைந்துள்ளேன்.

எனக்கு முன்னால் சென்னை அணிக்கு பயிற்சியாளராக இருந்த மார்க்கோ மெட்டாரஸி சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவர் தனது பொறுப்பை இப்போது என்னிடம் விட்டுச் சென்றிருக்கிறார். எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த பயிற்சியாளர் பணியை சிறப்பாக மேற்கொள்ள முயற்சிப்பேன். சென்னை அணியை மீண்டும் சாம்பியனாக்க முடியும் என நம்புகிறேன்.

ஒரு வீரர் சென்னை அணியின் உடையை அணிந்துவிட்டால், அவர் 100 சதவீத பங்களிப்பை செய்ய வேண்டும். அந்த வீரர் தன்னை அணிக்காக முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். அதுபோன்ற வீரர்களையே நான் விரும்புகிறேன்.

இதேபோல் வீரர்களிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கிறேன். அவர்கள் களத்தில் ஆடுகிறபோது விதிமுறைகளை மீறக்கூடாது. நடுவரிடமோ அல்லது எதிர் அணியினரிடமோ மோதலில் ஈடுபடக்கூடாது” என்று அவர் கூறினார்.