ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. மலேசியா - மியான்மர் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. 

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மலேசியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மியான்மர் அணி சீட்டு கட்டுபோல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. முதல் மூன்று மியான்மர் வீரர்கள் டக் அவுட் ஆகி வெளியேறினர். குறிப்பாக மலேசியாவின் பவன்தீப் சிங் 4 ஓவர் வீசி 1 ரன் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் 3 ஓவர்கள் மெய்டன் ஆக்கினார். அந்த அணி 9 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. 

இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் மழை ஓய்ந்த பிறகு டக்வர்த் லீவிஸ் முறைப்படி 8 ஓவரில் 6 ரன் எடுத்தால் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மியான்மர் அணியின் 6 வீரர்கள் டக் அவுட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணி எடுத்த 9 ரன்களில் 3 ரன் ஒய்டின் மூலம் கிடைத்தது.

 

இலக்கை எளிதாக எட்டிவிடலாம் என்று களமிறங்கிய மலேசியா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். பின்னர் வந்த சுகான் அழகுரத்னம் ஒரு ரன் தேவை என்ற நிலையில் சிக்ஸர் அடித்து வெற்றியை பதிவு செய்தார். மலேசியா 1.4 ஓவரில் 11 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது புள்ளிப்பட்டியலில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று நேபாளம் முதலிடத்திலும், சிங்கப்பூர், மலேசியா அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. சீனா கடைசி இடத்தில் உள்ளது.