ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் பந்துவீச்சாளர்கள் பிரிவில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் தொடர்கிறார்.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைக்கான புதிய பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் இரண்டாம் இடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸன் மூன்றாவது இடங்களில் உள்ளனர்.

இந்திய வீரரான சேதேஷ்வர் புஜாரா 4-வது இடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 5-ஆவது இடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன் 21 இடங்கள் முன்னேறி 39-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் தொடர்கிறார். இந்திய வீரர் அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி, ஓரிடம் முன்னேறி 23-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் பட்டியலில், வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்தில் தொடர்கிறார். இந்தியர்களான ஜடேஜா இரண்டாவது இடத்தையும், அஸ்வின் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.