ஆல் இங்கிலாந்து சாம்பியன் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் அதிர்ச்சித் தோல்விக் கண்ட இந்தியாவின் பி.வி.சிந்து, தோல்வியிலிருந்து நான் பலத்துடன் மீண்டு வருவேன் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் ஆல் இங்கிலாந்து சாம்பியன் பாட்மிண்டன்  போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த சிந்து 21-19, 19-21, 18-21 என்ற செட்களில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுசியின் அதிர்ச்சித் தோல்விக் கண்டார்.

தோல்விக்குப் பிறகு சிந்து பேசியது: "நான் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஆனால், இன்றைய நாள் என்னுடையதாக இல்லை. 

ஒருவர் வென்றால், மற்றவர் தோற்றே ஆக வேண்டும். இந்த ஆட்டத்தில் அதிக ரேலிக்கள் இருந்தது. யமாகுசி சிறப்பாக ஆடினார். 

மூன்று செட்களில் ஆடுவது அவ்வளவு எளிதானதல்ல. 2,3 புள்ளிகள் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இறுதியில் ஆட்டம் எவரது கைக்கும் செல்லும். 

இந்தப் போட்டியில் இருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. வெற்றி, தோல்வியை தவிர்த்து இது நல்லதொரு போட்டியாக இருந்தது. தற்போதைய தோல்வியிலிருந்து நான் பலத்துடன் மீண்டு வருவேன்" என்று அவர் கூறினார்.