I will play cricket until 2019 - Yuvraj Singh
வயதாகிக் கொண்டிருந்தாலும் 2019-ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் விளையாடுவேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறினார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், "கடந்த 17 ஆண்டுகளாக நான் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறேன். கடந்த மூன்று உடற்தகுதி சோதனைகளில் தோல்வியைச் சந்தித்தேன். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
எனது எதிர்காலம் குறித்த முடிவை நான் மட்டுமே மேற்கொள்வேன். தோல்வியைக் கண்டு எனக்கு பயமில்லை. வாழ்வில் வெற்றியாளராக மிளிர வேண்டும் என்றால், முதலில் நீங்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.
நான் இப்போதும் கிரிக்கெட் விளையாடுகிறேன். அடுத்து எந்த முறையிலான போட்டியில் விளையாடப் போகிறேன் எனத் தெரியவில்லை. வயதாகிக் கொண்டு வருவதால், முன்பை விட அதிகமாக என்னை தயார்படுத்திக் கொள்கிறேன்.
எத்தனை தோல்விகள் வந்தாலும், 2019-ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் விளையாடுவேன். அதன் பிறகே இதர முடிவுகள் குறித்து யோசிப்பேன்" என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
