தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக அனைத்துவிதமான போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் டிவில்லியர்ஸ், “கடந்த ஓர் ஆண்டாக எனது கேப்டன்ஷிப் குறித்து பெரிய அளவில் பேசப்பட்டது. ஊடகங்களும் ஏராளமான செய்திகளை வெளியிட்டன. எனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்க இதுதான் சரியான தருணம் என்று கருதுகிறேன்.

கடந்தாண்டுகளில் எனக்கு வழங்கப்பட்ட பணிகளை திறம்படச் செய்ய முயற்சித்து இருக்கிறேன். தற்போதைய நிலையில் மனதளவிலும், உடலளவிலும் நான் மிகுந்த களைப்படைந்துவிட்டதாக கருதுகிறேன். இப்போது எங்களுக்கு இரு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

தற்போதைய நிலையில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளின் கேப்டன் பதவிகளில் டூபிளெஸ்ஸிஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதை மனதில் வைத்தே நான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தேன்.

கடந்த ஆறு ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்ததை மிகப்பெரிய கெளரவமாகக் கருதுகிறேன். எனினும் அந்தப் பதவிக்கு மற்றொருவர் வர வேண்டிய தருணம் இது. புதிய கேப்டனாக யார் தேர்வு செய்யப்பட்டாலும், அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.