நிடாஹஸ் கோப்பை டி20 போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் பந்துகளை வீணடித்ததால் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று எனக்கு வரும் அனுதாபங்களை ஏற்கும் நிலையில் நான் இல்லை என்று விஜய் சங்கர் தெரிவித்தார்.

நிடாஹஸ் கோப்பை டி20 போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 167 ஓட்டங்களை சேஸ் செய்த இந்தியா கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. 

அப்போது களத்தில் தினேஷ் கார்த்திக்குடன் ஆடிய விஜய் சங்கர், சில பந்துகளை  ஓட்டங்கள் எடுக்காமல் வீணடித்தார். இறுதியில், ஒரு பந்துக்கு ஐந்து ஓட்டங்கள் தேவை இருந்த நிலையில், தினேஷ் கார்த்தி சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்தார்.

இந்த நிலையில், இக்கட்டான சூழலில் விஜய் சங்கர் பந்துகளை வீணடித்தது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. 

அதுகுறித்து விஜய் சங்கர் நேற்று கூறியது:  "சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என பலர் குறுந்தகவல் அனுப்பினர். ஆனால், அந்த அனுதாபங்களை ஏற்கும் நிலையில் நான் இல்லை. உண்மையில் அந்தச் சூழலில் இருந்து மீண்டு வர விரும்புகிறேன். 

இந்தியாவுக்காக விளையாடும்போது இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும். அதை நான் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அந்த ஆட்டத்தில் நான் அணியை வெற்றி பெறச் செய்திருந்தால், அனைத்தும் வேறு மாதிரியாக இருந்திருக்கும். இவை அனைத்துமே வளர்ச்சியின் ஒரு பகுதிதான்.

இதுபோன்ற நிலை சிறந்த வீரர்களுக்குமே ஏற்பட்டதாக, ஆட்டத்துக்குப் பிறகு கேப்டன் ரோஹித், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் தைரியமளித்தனர். 

உண்மையில் உள்நாட்டுப் போட்டிகளில் நான் இத்தனை டாட் பந்துகளை எதிர்கொண்டதில்லை. அந்த ஓவரை முஸ்டாஃபிஸுர் அருமையாக வீசினார்" என்று அவர் கூறினார்.