Hong Kong Super Series Badminton Indian players advanced to second round

ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தங்களது பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா தனது முதல் சுற்றில், உலகின் 44-ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் மெட்டே பெளல்சென்னை 21-19, 23-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

சாய்னா தனது இரண்டாவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் சீனாவின் சென் யுஃபெய்யை சந்திக்க உள்ளார்.

போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சிந்து, தனது முதல் சுற்றில் 21-18, 21-10 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லியூங் யுட் யீயை வென்றார்.

சிந்து 2-வது சுற்றில் ஜப்பானின் அயா ஒஹோரி அல்லது ரஷியாவின் ஈவ்ஜெனியா கொசெட்ஸ்கயாவை எதிர்கொள்கிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணாய் 19-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் ஹு யுன்னை வென்றார்.

உலகின் 10-ஆம் நிலை வீரரான பிரணாய் அடுத்த சுற்றில் ஜப்பானின் கஸுமாசா சகாயுடன் மோதுகிறார்.