எம்சிசி மற்றும் முருகப்பா தங்கக் கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியின் இரண்டாவது நாளில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியன் இரயில்வே, ஓஎன்ஜிசி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணிகள் வெற்றி அடைந்தன.

91-வது எம்சிசி மற்றும் முருகப்பா தங்கக் கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில்
இந்தியன் இரயில்வே அணியும், பெங்களூரு ஹாக்கி அணியும் மோதின. இதில், 6-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஹாக்கி அணியைத் தோற்கடித்தது இந்தியன் ரயில்வே அணி.

பின்னர் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஓஎன்ஜிசி அணியும், ஹாக்கி ஒடிஸா அணியும் மோதின. இதில், 7-1 என்ற கோல் கணக்கில் ஹாக்கி ஒடிஸா அணியைத் தோற்கடித்தது ஓஎன்ஜிசி அணி.

பின்னர் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணி மற்றும் பிபிசிஎல் (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) அணி மோதின. இதில், 1-0 என்ற கோல் கணக்கில் பிபிசிஎல் அணியைத் தோற்கடித்தது பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணி.