வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட தோனி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அண்மைக்காலமாக ஃபார்மில்லாமல் தவித்துவருகிறார். கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடினார் தோனி. அதனால் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார் என்றும் இனிமேல் சிறப்பாக ஆடுவார் என்றும் நம்பப்பட்ட நிலையில், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் தோனி சோபிக்கவில்லை. 

உலக கோப்பையில் கண்டிப்பாக தோனி ஆடுவார் என்ற நிலையில், அவர் ஃபார்மில்லாமல் தவித்துவருவது, இந்திய அணிக்கு பெரிய கவலையாக உள்ளது. உலக கோப்பைக்கு முன்னதாக போதுமான போட்டிகளில் ஆடி மீண்டும் ஃபார்முக்கு வரவேண்டும் என்பதால் அவர் உள்நாட்டு போட்டிகளில் ஆட வேண்டும் என்று கவாஸ்கர் உள்ளிட்ட பல முன்னாள் ஜாம்பவான்கள் வலியுறுத்தினர். ஆனால் தோனி உள்நாட்டு போட்டிகளில் ஆடவில்லை. 

அவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் போதுமான போட்டிகளில் ஆட வாய்ப்பு இல்லாததால் பேட்டிங்கில் டச்சில் இருப்பதில் சிக்கல் இருக்கிறது. இதற்கிடையே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களிலிருந்தும் தோனி நீக்கப்பட்டார். எனவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு சுமார் இரண்டரை மாத இடைவெளிக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் நீக்கப்பட்ட தோனி, நியூசிலாந்து தொடரில் மீண்டும் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். இரண்டு தொடர்களில் புறக்கணிக்கப்பட்டதால் தோனியின் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்பட்டது. ஏனெனில் 2020 டி20 உலக கோப்பையில் கண்டிப்பாக தோனி ஆட வாய்ப்பில்லை என்பதால் டி20 அணியில் தோனிக்கு பதிலாக அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனை உருவாக்க வேண்டிய கடமை அணி நிர்வாகத்துக்கும் தேர்வுக்குழுவுக்கும் உள்ளது. எனவே அதனடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் நீக்கப்பட்டார். 

ஆனால் இப்போது நியூசிலாந்து தொடரில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளார். அதற்கு காரணம், உலக கோப்பைக்கு முன்பாக தோனி போதுமான போட்டிகளில் ஆட வேண்டும் என்பதற்காகவே அணியில் எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் ஆகியவற்றில் ஆட உள்ளது. எனவே மொத்தமாகவே 11 போட்டிகளில் தான் இந்திய அணி ஆட உள்ளது. அப்படியிருக்கையில் அதிலும் 3 டி20 போட்டிகளில் தோனியை நீக்கிவிட்டால் வெறும் 8 சர்வதேச போட்டிகளில்தான் ஆடுவார். அது போதாது என்ற காரணத்தினால்தான் டி20 தொடரிலும் தோனி சேர்க்கப்பட்டுள்ளார்.