ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் உலகின் 117-ஆம் நிலை வீரரான உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினிடம், நடப்புச் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக 4 மணி 48 நிமிடங்களுக்கு நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 7-6(8), 5-7, 2-6, 7-6(5), 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார் டெனிஸ்.

முன்னதாக, டிசம்பரில் நடைபெற்ற ஆசிய வைல்ட் கார்டு போட்டியில் வென்றதன் மூலம் முக்கியச் சுற்றுக்கு முன்னேறியுள்ள டெனிஸ், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஜோகோவிச்சை கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2008-க்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியிலிருந்து ஜோகோவிச் இவ்வாறு ஆரம்பத்திலேயே வெளியேறுவது இது முதல் முறையாகும். முன்னதாக, 2008-ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் ரஷியாவின் மராட் சஃபின், ஜோகோவிச்சை வெளியேற்றியிருந்தார்.

கடந்த 7 ஆண்டுகளில் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்கு வெளியே இருக்கும் வீரர்களிடம் ஜோகோவிச் தோல்வியை சந்திப்பது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக, கடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் உலகின் 145-ஆவது நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவிடம் ஜோகோவிச் தோல்வியை தழுவியிருந்தார்.

வெற்றி குறித்துப் பேசிய டெனிஸ், "இது எனக்கு மிகப்பெரிய வெற்றியாகும். இதன்மூலம் ஜோகோவிச் போன்ற பெரிய வீரர்களுக்கு நிகராகவும் விளையாட இயலும் என்பதை என்னால் உணர முடிகிறது. ஜோகோவிச்சின் இந்த தோல்விக்காக வருந்துகிறேன். அவருக்கு எதிரான இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பாக ஆடினேன். உண்மையில், எனது ஆட்டம் எனக்கே ஆச்சரியத்தை அளித்தது' என்றார்.

இஸ்டோமின் தனது 3-ஆவது சுற்றில், போட்டித் தரவரிசையில் 30-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் பாப்லோ கரேனோ பஸ்டாவை சந்திக்கிறார்.