அமெரிக்க ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் வாகைச் சூடி அசத்தினார்.

அமெரிக்க ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி அமெரிக்காவின் அனாஹெய்ம் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் மற்றும் சகநாட்டவரான காஷ்யப் ஆகியோர் மோதினர்.

இதில் 21-15, 20-22, 21-12 என்ற செட் கணக்கில் காஷ்யப்பை வீழ்த்தி வாகைச் சூடினார் எச்.எஸ்.பிரணாய்.

வெற்றி குறித்து எச்.எஸ்.பிரணாய் பேசியது:

“இறுதி ஆட்டம் மிகச்சிறந்த ஒன்றாகும். இருவரும் பட்டம் வெல்ல வேண்டும் என்ற தீவிரத்தோடு ஆடியதால் இந்த ஆட்டம் தரமானதாகவும், ரசிகர்களுக்கு விருந்தாகவும் அமைந்தது. 2-ஆவது செட்டை நூலிழையில் இழந்த பிறகு அமைதியாகவும், பொறுமையாகவும் ஆடினேன். அதுதான் எனது வெற்றிக்கு உதவியதாக நம்புகிறேன்.

2-ஆவது செட்டில் முதல் செட்டைவிட சிறப்பாக ஆடினார் காஷ்யப். எனக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார். எனது ஷாட்களை மிக எளிதாக சமாளித்தார். அதனால் அவரால் 2-ஆவது செட்டை கைப்பற்ற முடிந்தது. ஆனால் 3-ஆவது செட்டில் எனது திட்டங்களை கொஞ்சம் மாற்றி விளையாடினேன். அதனால் முன்னிலை பெற முடிந்தது.

மொத்தத்தில் இந்தத் தொடரில் விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்ததாக நியூஸிலாந்து ஓபனில் விளையாடுவதை எதிர்நோக்கி இருக்கிறேன்.

முதுகெலும்பின் அடிப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டதன் காரணமாக கனடா ஓபனில் சரியாக விளையாட முடியவில்லை. அதன்பிறகு தொடர் பயிற்சியில் ஈடுபட்டதன் மூலம் இப்போது பட்டம் வென்றிருக்கிறேன். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பதால், ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் கனடா ஓபனில் தோற்றது ஏமாற்றளிக்கவில்லை” என்று அவர் கூறினார்.