He is the first Australian player to score hat-trick twice in a single match ...
ஒரு போட்டியில் இருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்.
ஆஸ்திரேலியாவில், 'ஷெஃபீல்டு ஷீல்டு' முதல்தர கிரிக்கெட் போட்டிக்கான ஆட்டத்தில் நியூ செளத் வேல்ஸ் - மேற்கு ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் நியூ செளத் வேல்ஸ் அணி 171 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கு ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸின்போது, 67-வது ஓவரை வீசிய நியூ செளத் வேல்ஸ் வீரரான ஸ்டார்க் 4-வது பந்தில் ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், அடுத்த பந்தில் டேவிட் மூடி, கடைசி பந்தில் சிம்மன் மேக்கின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதேபோல், மேற்கு ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸின்போது 76-வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகள் மற்றும் 77-வது ஓவரின் முதல் பந்தில் முறையே பெஹ்ரென்டார்ஃப், டேவிட் மூடி, ஜோனோ வெல்ஸ் ஆகியோரை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இதன்மூலம், முதல்தர கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் இருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார்.
அதேபோல், ஒட்டுமொத்த முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் இச்சாதனையை நிகழ்த்திய 8-வது வீரர் ஸ்டார்க் ஆவார். அதேவேளையில், கடந்த 39 ஆண்டுகளில் இந்தச் சாதனையை செய்துள்ள முதல் வீரரும் இவரே.
