விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஆடியிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் ஹசாரே தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மும்பை அணியும் ஜார்கண்ட் அணியை வீழ்த்தி டெல்லி அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. 

இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் ஜார்கண்ட் அணிக்காக தோனி ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜார்கண்ட் அணி வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளதையும் ஒரு அணியாக அவர்கள் நன்றாக செட் ஆகிவிட்டதையும் சுட்டிக்காட்டி புதிதாக அணியில் இணைந்து அதை கெடுக்க விரும்பவில்லை என தெரிவித்துவிட்டார் தோனி. 

அதனால் அவர் ஜார்கண்ட் அணியில் ஆடவில்லை. தோனி ஜார்கண்ட் அணிக்காக ஆடுவார் என்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்த போதிலும் தோனி ஜார்கண்ட் அணியில் ஆட மறுத்துவிட்டார்.

இதையடுத்து அரையிறுதியில் டெல்லி அணியுடன் மோதிய ஜார்கண்ட் அணி போராடி கடைசி ஓவரில் தோல்வியடைந்தது. 

இந்நிலையில், அந்த போட்டியில் வென்ற டெல்லி அணிக்கு வாழ்த்து தெரிவித்து டுவீட் செய்திருந்த ஹர்பஜன் சிங், அந்த டுவீட்டில், ஒருவேளை தோனி ஜார்கண்ட் அணியில் ஆடியிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருந்திருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.