ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலத்தில் தமிழ்நாட்டு மாயாஜால ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தியை அதிகபட்சமான ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

27 வயதான வருண் சக்கரவர்த்தி தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர். மதுரை பாந்தர்ஸ் அணிக்காக ஆடி, தனது மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் மிரட்டினார். 10 டி20 போட்டிகளில் ஆடி 4.7 எகானமி ரேட்டை வைத்திருந்தார். இவரது ஸ்பின் பவுலிங்கை பார்த்து, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி, இவரை மிகச்சிறந்த திறமைசாலி என வர்ணனையில் பாராட்டியிருந்தார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் அருமையாக வீசியதால் விஜய் ஹசாரே மற்றும் ரஞ்சி டிராபி ஆகிய தொடர்களில் தமிழ்நாட்டு அணிக்காக ஆடும் வாய்ப்பை பெற்றார். இந்நிலையில், இவரது திறமையை கண்ட பஞ்சாப் அணி, ஐபிஎல் ஏலத்தில் மற்ற அணிகளுடன் கடும் போட்டியிட்டு வருண் சக்கரவர்த்தியை எடுத்தது. 

வருண் சக்கரவர்த்தி, ஐபிஎல் 2019 சீசனில் முதன்முறையாக ஆட உள்ளார். ஆனால் இதற்கு முன்னதாக சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய அணிகளுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசியுள்ளார். 

வலைப்பயிற்சியில் அவர் பந்துவீசியதை பார்த்த முன்னாள் ஸ்பின் பவுலர் ஹர்பஜன் சிங், வருண் சக்கரவர்த்தியின் திறமையை வெகுவாக பாராட்டியுள்ளார். வருண் குறித்து பதிவிட்டுள்ள டுவீட்டில், வருண் சிஎஸ்கே வலைப்பயிற்சியில் பந்துவீசியதை மிக அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். இந்திய அணிக்கு ஆடும் தகுதியும் திறமையும் பெற்றவர் வருண் சக்கரவர்த்தி. தேர்வாளர்கள் வருண் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். வேகமும் சீற்றமும் நிறைந்த ஸ்பின் பவுலர் வருண். மற்றொரு மாயாஜால ஸ்பின்னர் கிடைத்துவிட்டார் என்று ஹர்பஜன் புகழ்ந்துள்ளார்.