ஐபிஎல்லின் போது ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் கன்னத்தில் அறைந்தது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவம். இந்நிலையில், ஐபிஎல்லுக்கு முன்னதாகவே ஸ்ரீசாந்த் அடி வாங்கியிருப்பார் என ஹர்பஜன் சிங் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. 

ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட புதிதில் ரசிகர்களுக்கு பெரும் வியப்புகளையும் ஆச்சரியங்களையும் அளித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியது ஐபிஎல். எதிரும் புதிருமாக இருந்த எதிரணி வீரர்கள் ஒன்றாக ஆடியது, முறைத்துகொண்ட மற்றும் மோதிக்கொண்ட வீரர்கள் கட்டி தழுவிக்கொண்டது, ஒன்றாக ஆடி நண்பர்களாக இருந்த வீரர்கள் மோதிக்கொண்டது என பெரும் ஆச்சரியங்களை ஐபிஎல் ஆரம்பத்தில் வழங்கியது. 

2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல்லில் முதல் சீசனிலேயே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது, ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைந்ததுதான். 2008 ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய ஹர்பஜன் சிங், பஞ்சாப் அணியில் ஆடிய ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைய, ஸ்ரீசாந்தோ களத்திலே கண்ணீர் விட்டு அழுதார். அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், இன்றும் பேசப்படுகிறது. 

இந்நிலையில், ஹர்பஜன் சிங் இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் மற்றுமொரு அதிரடியை கிளப்பியுள்ளார். இந்த பேட்டியில் பேசிய ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் செயல்படுவதில் மிகவும் மோசமான வீரர். ஆனால் 2007ல் நடந்த டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் கடைசி பந்தில் மிஸ்பா சரியாக ஆடாத ஷாட்டை சரியாக கேட்ச் செய்துவிட்டார் ஸ்ரீசாந்த். அன்று மட்டும் அந்த கேட்ச்சை விட்டிருந்தால், அன்றே ஸ்ரீசாந்தை அறைந்திருப்பேன் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஸ்ரீசாந்தை அடித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும், தற்போதும் கூட இவ்வளவு கோபமாக ஹர்பஜன் பேசியிருக்கிறார். 2007 டி20 உலக கோப்பையை, அப்போதைய இளம் கேப்டன் தோனி தலைமையிலான இளம் படை வென்று அசத்தியது. இந்த கோப்பையை வென்ற சில மாதங்களுக்கு முன்புதான் ஒருநாள் உலக கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. இதையடுத்து அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட், கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய, தோனி கேப்டனானார். எனவே அந்த டி20 உலக கோப்பை என்பது இளம் கேப்டன் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

அந்த டி20 உலக கோப்பை தொடரிலும் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் போன்ற ஒருசில சீனியர் வீரர்களே ஆடினர். அந்த அணியில் பெரும்பாலானோர் இளம் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.