விராட் கோலியின் கேப்டன்சி குறித்து ஹர்பஜன் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வுபெற்றதை அடுத்து இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக கடந்த 2014ம் ஆண்டு கோலி பொறுப்பேற்றார். அதன்பிறகு கோலியின் தலைமையில் இந்திய அணி 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 22 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றிதான், கோலியின் தலைமையிலான இந்திய அணி பெற்ற 22வது டெஸ்ட் வெற்றி. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன்களின் பட்டியலில் கங்குலியை முந்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் கோலி.

கங்குலி தலைமையில் இந்திய அணி 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 21 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 27 டெஸ்ட் வெற்றிகளுடன் தோனி முதலிடத்தில் இருக்கிறார். தோனியை கோலி விரைவில் முந்திவிடுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்தாலும், அவரது கேப்டன்சி குறித்த விமர்சனங்களும் அதிருப்திகளும் தொடர்ந்து எழுந்த வண்ணம்தான் உள்ளன.

இதுவரை கோலி தலைமையில் ஆடிய 38 டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் ஒரே அணி ஆடியதே இல்லை. போட்டிக்கு போட்டி, குறைந்தது அணியில் ஒரு வீரரையாவது மாற்றியுள்ளார் கோலி. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், 38 போட்டிகளுக்கும் 38 அணிகளை வைத்து ஆடியிருப்பது என்பது என்னை பொறுத்தவரை ரொம்ப அதிகபட்ச செயல்பாடாக தெரிகிறது. ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒவ்வொரு அணுகுமுறை இருக்கும். ஒரு கேப்டனுக்கு அதில் நம்பிக்கை இருக்கும் அதே சமயத்தில் அணி நிர்வாகமும் அதற்கு உடன்பட்டால், அதன்பிறகு நாம் அதுகுறித்து பேசி எந்த பயனும் இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

கோலியின் கேப்டன்சி குறித்து இந்திய அணி மட்டுமல்லாது, மற்ற அணிகளின் முன்னாள் வீரர்களும் கேப்டன்களும் அவ்வப்போது அதிருப்தி தெரிவித்துவரும் நிலையில், அணியை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும் கோலியின் செயல் குறித்து ஹர்பஜனும் அதிருப்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.