இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய தொடர்களிலும் புறக்கணிக்கப்பட்டார். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவர் ஆடும் லெவனில் அணியில் சேர்க்கப்படுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் அவரை ஆடும் லெவனில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்பதே பல முன்னாள் ஜாம்பவான்களின் கருத்தாக உள்ளது. 

பலரும் இந்த கருத்தை முன்வைத்து வந்த நிலையில், ரோஹித் சர்மாவை ஆடும் லெவனில் சேர்க்கவில்லை என்றால், கண்ணை மூடிக்கொண்டு ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவளிப்பேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்ததாக ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

ஹர்பஜன் சிங்கா இப்படி பேசியது என்று பலரும் ஆச்சரியமடைந்தனர். இந்நிலையில், தான் கூறியதாக பரவிவருவது அப்பட்டமான வதந்தி என்று கூறியுள்ள ஹர்பஜன் சிங், அதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங், இதுபோன்ற முட்டாள்தனமான கூற்றை நான் சொன்னேன் என்று வதந்தியை பரப்புகிறார்கள். இதுபோன்ற எல்லா செயல்களையும் நிறுத்திடுங்க.. இந்தியாவிற்கு ஆதரவளித்து உத்வேகப்படுத்துவோம் என்று ஹர்பஜன் பதிவிட்டுள்ளார். 

ஹர்பஜன் சிங் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்டகாலம் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடிப்படையாக வைத்துத்தான் இப்படி ஒரு புரளியை யாரோ கிளப்பி விட்டிருக்கிறார்கள்.