இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஹனுமா விஹாரிக்கு இந்திய அணியை மீட்டெடுக்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 332 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. ஹனுமா விஹாரியும் ரவீந்திர ஜடேஜாவும் களத்தில் உள்ளனர். 

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 158 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது இந்திய அணி. ஹனுமா விஹாரி 25 ரன்களுடன் களத்தில் உள்ளார். விஹாரி மற்றும் ஜடேஜாவிற்கு பிறகு பவுலர்கள் தான் இருக்கிறார்கள். எனவே இவர்கள் இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அதேநேரத்தில் ரன்களையும் எடுக்க வேண்டும்.

இந்த போட்டியில்தான் விஹாரி அறிமுகமாகியுள்ளார். அறிமுக போட்டியிலேயே இந்திய அணியை இக்கட்டான சூழலிலிருந்து மீட்டெடுக்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தி சிறப்பாக ஆடி, இந்திய அணியை நெருக்கடி நிலையிலிருந்து மீட்டால், அது விஹாரியின் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு சிறப்பாக அமையும். 

கருண் நாயருக்கு பதிலாக விஹாரி அணியில் சேர்க்கப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. அந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன்னை அணியில் சேர்த்தததற்கு அர்த்தம் சேர்க்கும் விதமாக விஹாரி ஆடுவாரா என்று பார்ப்போம்.