ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்  போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளன. 

இதில், நேற்றைய போட்டியில் இந்திய அணி, அதன் பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் விளையாடியது.  சுமார் ஓராண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், ரசிகர்கள் மத்தியில் போட்டிக் குறித்த எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. இதில், டாஸ் வென்ற  பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் பக்கர் சமான் இருவரும் முறையே 2 மற்றும் 0 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வந்த பாபர் அசாம் மற்றும் சோயிப் மாலிக் இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்நிலையில், 17வது ஓவரை வீசிய இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அந்த ஓவரின் 5வது பந்தை வீசும்போது, முதுகு வலியால் சுருண்டு மைதானத்தின் நடுவே விழுந்தார்.

இதைப் பார்த்த இந்திய வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதன்பின், அங்கு ஸ்டெரச்சர் கொண்டுவரப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டார். அவர் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்படும்போது இருந்த நிலை, இந்திய ரசிகர்களை சிறிது கலக்கத்திற்கு உள்ளாக்கி உள்ளது. 

இந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் வீரர்களிடையே மனச் சோர்வை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்துடுத்து களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள், புவனேஷ்குமார் , கேதர் ஜாதவ், பும்ரா, குல்தீப் யாதவ் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அவர்களது பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் வீரர்கள் 43.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

புவனேஷ்குமார் , கேதர் ஜாதவ் தலா 3 வீக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் ஒரு வீக்கெட்டையும் கைப்பற்றி பாகிஸ்தான் அணியை பதம்  பார்த்தனர். 

163 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்தியா, தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது. இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் தவான் நிலைத்து நின்று ஆடினர். 

ஆட்டத்தின் 13.1வது ஓவரில் 52 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷிகெர் தவான் 46 ரன்களில் பஹீம் பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதை அடுத்து களமிறங்கிய ராயுடு, தினேஷ் கார்த்திக் ஜோடி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் விக்கெட்டுகள் எதுவும் போகாமல், இந்த இணை 164 ரன்களை எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தது. 

அம்பத்தி ராயுடு 31 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 31 ரன்களுடன் கடைவரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணியை சேர்ந்த அஷ்ரப் மற்றும் சதாப் கான் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.