Gujarat defeated Baroda motap the state is going to
விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி காலிறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அரையிறுதியில் பரோடாவுடன் மோதுகிறது.
தில்லியில் நேற்று நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த குஜராத் அணி 49.4 ஓவர்களில் 211 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ரூஜுல் பட் 98 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்கள் குவித்தார்.
தமிழகம் தரப்பில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளையும், ராஹில் ஷா, சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் பேட் செய்த தமிழக அணியில் கெளஷிக் காந்தி - கங்கா ஸ்ரீதர் ராஜூ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.4 ஓவர்களில் 62 ஓட்டங்கள் சேர்த்தது. கௌஷிக் காந்தி 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு அபராஜித் 34 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்க, மறுமுனையில் அசத்தலாக ஆடிய கங்கா ஸ்ரீதர் ராஜூ 95 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு தினேஷ் கார்த்திக் 21, இந்திரஜித் 1 என அடுத்தடுத்து வெளியேற, கடைசிக் கட்டத்தில் முகமது வெளுத்து வாங்கினார். இதனால் 42.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்கள் எடுத்து வெற்றி அடைந்தது தமிழகம்.
முகமது 33 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35, விஜய் சங்கர் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
குஜராத் தரப்பில் செளத்ரி, தாஹியா, படேல், பட், பி.கே.பன்சால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
வரும் 16-ஆம் தேதி தமிழகம் தனது அரையிறுதியில் பரோடா அணியை சந்திக்கிறது.
பரோடா தனது காலிறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகத்தை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
