ஓராண்டுக்கு பிறகு ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடித்த ஜடேஜா, முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங் தேர்வு செய்ததால், வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஜடேஜா களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஆடியதற்கு பிறகு கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒருநாள் அணியில் சேர்க்கப்படாமல் இருந்த ஜடேஜா, இந்த போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பான பங்களிப்பை அளித்து, தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்து, ஒருநாள் அணிக்கு மீண்டும் வந்துள்ளார்.

வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் மற்றும் ஷாண்டோ ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவரும் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா வீசிய முதல் நான்கு ஓவர்களை மிகவும் கவனமாக ஆடினர். எனினும் புவனேஷ்வர் குமார் வீசிய 5வது ஓவரின் மூன்றாவது பந்தில் லிட்டன் தாஸ் கேதர் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையடுத்து பும்ரா வீசிய அடுத்த ஓவரிலேயே ஷாண்டோவும் அவுட்டானார்.

அதன்பிறகு அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹாசன் மற்றும் முஷ்ஃபிகுர் ரஹீம் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றனர். ஆனால் ஓராண்டுக்கு பிறகு கம்பேக் கொடுத்த ஜடேஜா, ஷாகிப்பை வீழ்த்தினார். வங்கதேச இன்னிங்ஸின் 10வது ஓவரை வீச ஜடேஜாவை அழைத்தார் கேப்டன் ரோஹித். முதல் பந்தில் சிங்கிள் கொடுத்த ஜடேஜா, இரண்டாவது பந்திலும் சிங்கிள் கொடுத்தார். ஆனால் இரண்டாவது பந்து நோ பால். அந்த ஃப்ரீஹிட்டை ஷாகிப் அல் ஹாசன் எதிர்கொண்டார். ஆனால் அந்த பந்தில் ஷாகிப் ரன் அடிக்கவில்லை. ஆனால் அதுவும் நோ பால் என்பதால் இரண்டாவதாக கிடைத்த ஃப்ரீஹிட் வாய்ப்பை பயன்படுத்தி பவுண்டரி அடித்தார் ஷாகிப். இதையடுத்து மூன்றாவது பந்திலும் பவுண்டரி அடித்தார். தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்த ஷாகிப் அல் ஹாசன், தொடர்ச்சியாக மூன்றாவது பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஓராண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்ற ஜடேஜா, அதை நன்கு பயன்படுத்தி தான் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து ஜடேஜா வீசிய 16வது ஓவரில் மிதுன் 9 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து ஆடிவருகிறது. ஜடேஜா மட்டுமே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.