இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 53-ஆவது லீக் ஆட்டத்தில் கோவா எப்.சி. அணி 5-4 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியைத் தோற்கடித்தது.

இரு அணிகளும் ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டதால் ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் இறங்கியதோடு, கோல் மழையும் பொழிந்தன. இதனால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

கோவா மாநிலம் ஃபட்ரோடாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 4-ஆவது நிமிடத்திலேயே சென்னை அணிக்கு 30 யார்ட் தூரத்தில் ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, அதில் அசத்தலாக கோலடித்தார் ஜெர்ரி. ஆனால் அசராமல் ஆடிய கோவா, 6-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது. மிக அபாரமாக ஆடிய ஜோப்ரே, சென்னை வீரர்களை பின்னுக்குத் தள்ளி லூயிஸுக்கு பந்தைக் கடத்த, அவர் அதை கோலாக்கினார்.

இதன்பிறகு 14-ஆவது நிமிடத்தில் கோவா வீரர் அர்னோலின் "ஓன்' கோல் அடிக்க, சென்னை அணி 2-1 என முன்னிலை பெற்றது. 21-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பின் மூலம் கோவாவின் ஜோப்ரே கோலடிக்க, ஸ்கோர் மீண்டும் சமநிலையை எட்டியது.

28-ஆவது நிமிடத்தில் டேனியல் கொடுத்த பாûஸ சரியாகப் பயன்படுத்திக் கொண்ட டுடு அற்புதமாக கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 68-ஆவது நிமிடத்தில் டவோராவும், 76-ஆவது நிமிடத்தில் லூயிஸும் கோலடிக்க, கோவா 4-3 என முன்னிலை பெற்றது. 88-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ரைஸ் கோலடிக்க, ஸ்கோரை சமன் செய்தது சென்னை.

இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் "இஞ்சுரி நேரத்தில்' டவோரா கோலடிக்க, கோவா 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இந்த சீசனில் கோவா அணி 14 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்தது. சென்னை அணி, 15 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளது.

நார்த் ஈஸ்ட்-கொல்கத்தா இடையிலான ஆட்டத்தின் முடிவைப் பொறுத்து சென்னை அணிக்கு 7-ஆவது இடமோ அல்லது 6-ஆவது இடமோ கிடைக்கலாம்.