ரோஹித் சர்மா களத்தில் நிலைத்து அடிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை யாராலும் தடுக்க முடியாது என்று ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. தென்னாப்பிரிக்க தொடரில் பாதியில் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்களை அடித்தும் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்துவரும் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடி டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்கும் முனைப்பில் உள்ளார்.

களத்தில் நிலைத்துவிட்டால் பெரிய இன்னிங்ஸ் ஆடிவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை விளாசினார். ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் இதுபோன்ற பெரிய இன்னிங்ஸை ஆடியதில்லை. ஆனால் ரோஹித் சர்மா தற்போது நல்ல ஃபார்மில் உள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில், ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல், ரோஹித் சர்மா எந்த விஷயத்துக்கும் பெரிய சிரமம் எடுத்துக்கொள்ளாத கூலான மனிதர். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை நான் ரசித்து பார்ப்பேன். களத்தில் நிலைக்க மற்ற வீரர்களை காட்டிலும் அதிக நேரத்தை அவர் எடுத்துக்கொண்டாலும், களத்தில் நிலைத்துவிடால் அவரது ஆட்டம் அபாரமாக இருக்கும். ரோஹித் சர்மா நிலைத்துவிட்டால் இந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிடும். ரோஹித் சர்மா தன்னை நோக்கி வரும் பந்துகளை எல்லா திசைகளிலும் அடித்து ஆடக்கூடியவர்.

வேகப்பந்து, சுழற்பந்து என அனைத்துவிதமான பந்துகளை பறக்கவிடுவார். உண்மையாகவே ரோஹித் சர்மா முழுமையான நட்சத்திர வீரர். ஒருநாள் போட்டிகளில் பல இரட்டை சதங்களை அடித்தவர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 264 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா சாதனையாளராக இருக்கிறார். அவர் அடித்து விளையாடத் தொடங்கிவிட்டால், ஆஸ்திரேலிய வீரர்களால் அவரை தடுக்க முடியாது. ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும்போது இக்கட்டான சூழல்களில் கூட கூலாக செயல்படுவதுதான் அவரது வலிமை.

ரோஹித் சர்மா சிரமப்படாமல் மிகவும் கூலாக பேட்டிங் ஆடுவார். அவரது கவனத்தை யாராலும் திசைதிருப்பவோ சிதறடிக்கவோ முடியாது. எனக்கு தெரிந்தவரை அதுதான் அவரது மிகப்பெரிய வலிமை என மேக்ஸ்வெல் புகழ்ந்து தள்ளியுள்ளார்.