Germany top scorer in Formula 1 car racing

ஃபார்முலா 1 கார்பந்தயத்தின் 7-வது சுற்றில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.

ஃபார்முலா 1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 7-வது சுற்றான கனடா கிராண்ட்பிரி பந்தயம் மான்ட்ரியல் ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. 

இதில் 305.27 கிலோ மீட்டர் தூர பந்தய இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். 

இந்த பந்தயத்தில் தொடக்கம் முதலே முன்னிலை வகித்த முன்னாள் சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் பெராரீ அணி 1 மணி 28 நிமிடம் 31.377 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்து 25 புள்ளிகளை கைப்பற்றினார். 

பின்லாந்து வீரர் வால்ட்டெரி போட்டாஸ் மெர்சிடஸ் 2-வது இடத்தை தனதாக்கி 18 புள்ளிகள் பெற்றார். 

நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பென் ரெட்புல் 3-வது இடத்தை பிடித்து 15 புள்ளிகள் பெற்றார்.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் மெர்சிடஸ் 5-வது இடமே பெற்றார். அவருக்கு 10 வெற்றி புள்ளிகள் கிட்டியது. 

ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரிச்சர்டோ ரெட்புல் 4-வது இடம் பிடித்து 12 புள்ளிகளை பெற்றார். போர்ஸ் இந்தியா அணி வீரர் ஸ்டீபன் ஓகான் 9-வது இடம் பிடித்தார். 

ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் 8-வது சுற்று பந்தயமான பிரான்ஸ் கிராண்ட்பிரி போட்டி வருகிற 24-ஆம் தேதி நடக்கிறது.