அடுத்த இன்னிங்ஸிலும் ராகுல் சரியாக ஆடவில்லை என்றால், அவரை அடுத்த போட்டிகளிலிருந்து நீக்க வேண்டும் என கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் தொடர்ந்து சொதப்பிவருகிறார். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக படுமோசமாக சொதப்பினார் ராகுல். முரளி விஜய், தவான் ஆகிய வீரர்கள் சோபிக்காதபோது அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். ஆனால் ராகுலுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. 

தொடர்ந்து சொதப்பிவரும் ராகுல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்துவரும் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் வழக்கம்போலவே சொதப்பினார். 

2வது ஓவரில் வெறும் 2 ரன்னில் வெளியேறினார். ராகுலுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வாய்ப்புகளே அதிகம். இனியும் அவரை நம்பி தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுவது அணிக்கு நல்லதல்ல. ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் அதேவேளையில், முதல் தர போட்டிகளிலும் இந்தியா ஏ அணிக்காகவும் தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் மயன்க் அகர்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டில் 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி வெறும் 331 ரன்களை மட்டுமே ராகுல் எடுத்துள்ளார். சராசரி வெறும் 22 ரன்கள். இந்நிலையில் ராகுல் குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், ராகுல் செய்த தவறையே திரும்ப திரும்ப செய்துவருகிறார். இங்கிலாந்தில் செய்த தவறுகளைத்தான் தற்போதும் செய்கிறார். அவரது தவறுகளை திருத்திக்கொள்ள முயலவே இல்லை. ஒரு சமயத்தில் மிகவும் தன்னம்பிக்கை மிகுந்த வீரராக திகழ்ந்தார். ஆனால் தற்போது அவரிடம் தன்னம்பிக்கையே இல்லை. தன்னம்பிக்கை இழந்து காணப்படுகிறார் ராகுல். இரண்டாவது இன்னிங்ஸிலும் ராகுல் சரியாக ஆடாத பட்சத்தில் எஞ்சிய போட்டிகளில் ராகுல் கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும் என்று கவாஸ்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.