ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவை கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில், காயத்தால் பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு தனி ஒரு வேகப்பந்து வீச்சாளராக அருமையாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார் உமேஷ். முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ் யாதவ், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு முன்பாகவே இந்திய அணியில் இடம்பிடித்த உமேஷ் யாதவிற்கு முன்னுரிமை வழங்கப்படாமல் இருந்துவந்தது. அவர்களுக்கு முன்பிலிருந்தே இந்திய அணிக்காக ஆடிவரும் பவுலராக இருந்தாலும் புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய இருவர்தான் முன்னணி பவுலர்களாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றனர். உமேஷ் யாதவ் மூன்றாவது அல்லது நான்காவது பவுலிங் தேர்வாகவே இருந்துவந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக தனி ஒரு வேகப்பந்து வீச்சாளராக அபாரமாக வீசி 10 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ், தேர்வுக்குழுவின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் உமேஷ் யாதவ் கூடுதல் தலைவலியை கொடுத்துள்ளார், ஆனால் இது நல்ல தலைவலிதான் என்று கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மற்றும் உமேஷ் யாதவ் குறித்து பேசிய முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்துவது என்பது சாதாரண விஷயமல்ல. உமேஷ் யாதவ் அருமையாக பந்துவீசினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்டில் அவர் ஆடுவதை பார்க்க விரும்புகிறேன் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.