இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றுவிட்டது. இந்நிலையில், 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. 

இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் சரியாக ஆடாத குக், இந்த போட்டியில் இதுவரை சிறப்பாக ஆடிவருகிறார். இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போகும் குக், கடைசி போட்டி என்பதால் சிறப்பாக ஆடிவருகிறார். உணவு இடைவேளை வரை அந்த அணி, ஒரு விக்கெட் இழப்பிறகு 68 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்த போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜாவும் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஹனுமா விஹாரியும் களமிறக்கப்பட்டனர். இந்த தொடரில் மற்ற அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், கருண் நாயருக்கு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் கருண் நாயருக்கு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஹனுமா விஹாரிக்கு அறிமுக போட்டியில் ஆட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்படாததற்கு கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், கருண் நாயர் உங்களுக்கு பிடித்த வீரர் இல்லை. அணி நிர்வாகத்துக்கு கருண் நாயரை பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அணியில் இடம்பெற்று ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அணி நிர்வாகத்திடம் கேள்வி கேட்க கருண் நாயருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அணி நிர்வாகம் கருண் நாயருக்கு பதில் சொல்லியே தீரவேண்டும். ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனை எடுப்பதென்றால் கருண் நாயருக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். கருண் நாயர் தேர்வு செய்யப்படாதது முட்டாள்தனமானது என கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

26 வயதான கருண் நாயர், இதுவரை இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். சேவாக்கிற்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் கருண் நாயர் தான். கடந்த 2016ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 303 ரன்கள் குவித்தவர் கருண் நாயர் என்பது குறிப்பிடத்தக்கது.