ஆசிய கோப்பையை வெல்லப்போவது எந்த அணி என கவாஸ்கர் கணித்துள்ளார். கவாஸ்கரின் கணிப்பு, இந்திய அணி வீரர்களை கடுப்பாக்கியுள்ளது. 

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகளும் இத்தொடரில் கலந்துகொண்டு ஆடுகின்றன. 

இத்தொடரின் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளும் உள்ளன. நேற்று நடந்த முதல் போட்டியில் இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. 

சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் மோதியதற்கு அடுத்து ஓராண்டுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் 19ம் தேதி மோதுகின்றன. இந்நிலையில், இந்த தொடரை எந்த அணி வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். 

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணி தான் இந்த ஆசிய கோப்பையையும் வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சமபலம் வாய்ந்த அணியாக பாகிஸ்தான் உள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் அந்நாட்டின் பிரதமராகியிருக்கிறார். எனவே அவருக்கு ஆசிய கோப்பையை பரிசளிக்க அந்த அணி விரும்பும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கவாஸ்கர் இப்படி சொல்லியுள்ள அதேநேரத்தில், ஆசிய கோப்பையை இந்திய அணிதான் வெல்லும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.