இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமான தொடர். 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவிவரும் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்று உத்வேகத்தை பெறும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தாலும் வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை தழுவிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில அந்த அணியை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. மேலும் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். தற்போதைய இந்திய அணி முன்னெப்போதையும் விட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றுள்ளது. புவனேஷ்வர் குமார், பும்ரா, உமேஷ், ஷமி, இஷாந்த் என 5 தரமான வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளது. இவர்களில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் முதல் போட்டியில் இந்திய அணி களமிறங்கும். 

ஸ்பின் பவுலிங்கை பொறுத்தமட்டில் அஷ்வின் மற்றும் குல்தீப் யாதவ் உள்ளனர். மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவதால் இரண்டு ஸ்பின்னர்கள் அணியில் எடுக்கப்படுவார்களா? அல்லது ஒருவரா? அப்படி ஒருவர் என்றால் யார் புறக்கணிக்கப்படுவார்? என்பன போன்ற பல கேள்விகள் உள்ளன. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், என்னை கேட்டால் அடிலெய்டு டெஸ்டில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் அஷ்வின், குல்தீப் ஆகிய இரண்டு ஸ்பின்னர்களுடன் ஆட வேண்டும். ஒருவேளை ஒரு ஸ்பின்னர் மட்டும் என்றால், என்னுடைய தேர்வு குல்தீப் யாதவ் தான். ஏனென்றால் டி20 தொடரில் குல்தீப்பின் பவுலிங்கை கணிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். எனவே டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்து குல்தீப்பால் நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.