நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோற்ற நிலையில், இந்த தொடரை இழந்தால் கூட பரவாயில்லை; ஆனால் இந்திய அணி செய்தே ஆக வேண்டிய ஒரு சோதனை முயற்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்தது. நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் சரிந்ததைப் போலவே இந்த போட்டியிலும் சரிந்தது. 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அதில் ஆடும் இந்திய அணி பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டு விட்டது. அதிகபட்சம் 2 வீரர்கள் இணையலாம். அந்த 2 வீரர்கள் யார் யார் என்பது, உலக கோப்பைக்கு முந்தைய போட்டிகளில் அவர்கள் ஆடும் விதத்தை பொறுத்து அமையும். 

ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியில் சேர்த்து உலக கோப்பையில் ஆடவைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. மிடில் ஆர்டர் பேட்டிங், ஆல்ரவுண்டர் ஆகியவற்றின் தேவைக்கு ஒருசிலர் உலக கோப்பையில் அணியில் இணைய வாய்ப்புள்ளது. எனினும் உலக கோப்பை அணியில் இடம்பெறுவது, அவர்களின் ஆட்டத்தை பொறுத்தது. 

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி செய்ய வேண்டிய காரியம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், உலக கோப்பைக்கான அணி தேர்வை மனதில் வைத்து சோதனை முயற்சிகளை செய்ய வேண்டும். அதேநேரத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெல்லவும் முனைய வேண்டும். உலக கோப்பைக்கான அணியை தேர்வு செய்வதற்கு முன் சில சோதனை முயற்சிகளை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒருநாள் போட்டிக்கான வீரர்களை டி20 போட்டியின் ஆட்டத்தின் அடிப்படையிலும் தேர்வு செய்ய முடியும். டி20 போட்டிகளில் ஆடும் விதத்தை வைத்தே அவர்கள் ஒருநாள் போட்டிக்கு தகுதியானவர்களா என்பதை தெரிந்துகொள்ள முடியும். நியூசிலாந்தில் டி20 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும். அதேநேரத்தில் இந்திய அணி இந்த தொடரை இழந்தாலும் நான் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஏனெனில் பரிசோதனைகளை செய்தே ஆக வேண்டும். எப்படி ஆடுகிறோம் என்பதுதான் முக்கியமே தவிர வெற்றி பெறுவதோ தோல்வி அடைவதோ பெரிய விஷயமல்ல. இப்போதைக்கு முழு கவனமும் உலக கோப்பையின் மீதே இருக்க வேண்டும். விஜய் சங்கர், ரிஷப் பண்ட், குருணல் பாண்டியா ஆகியோரில் நெருக்கடியை சமாளிக்கக்கூடியவர் யார் என்பது போன்ற சோதனைகளை செய்து அதனடிப்படையில் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு இந்த டி20 தொடரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.