இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் கவுதம் காம்பீர். அணியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்ட ஒரு நேர்மையான வீரர் காம்பீர். களத்தில் மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியேயும் மிகவும் நேர்மையாக தனது மனதில் பட்டதை வெளிப்படையாகவும் அதிரடியாகவும் தெரிவிக்கக்கூடியவர். அதுவே அவருக்கு எதிராக பல தருணங்களில் திரும்பியுள்ளது. 

2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகிய இரண்டையும் வென்ற இந்திய அணியில் மிகப்பெரிய பங்காற்றியவர் கவுதம் காம்பீர். குறிப்பாக இரண்டு உலக கோப்பை தொடர்களின் இறுதி போட்டிகளிலும் அபாரமாக ஆடி இந்திய அணியை வெற்றி பெற செய்தவர். 

2013ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் ஆடாத காம்பீர், ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் ஆடிவந்தார். இந்நிலையில், அண்மையில் அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார். 

ஓய்வு அறிவித்த பிறகு ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் எதிர்கால திட்டங்கள் குறித்தும் இளம் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பு குறித்தும் பேசினார். அப்போது, இதுவரை பயிற்சியளிப்பது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் கிரிக்கெட்டுடன் தொடர்பிலே தான் இருப்பேன். அந்த வகையில், பயிற்சியளிக்க நேர்ந்தால் அது என்னை உற்சாகமூட்டும். நான் பயிற்சியாளர் ஆகிறேனா அல்லது மெண்டார் ஆகிறேனா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

பயிற்சியாளர் ஆவதற்கு என்று தனியாக தயார் செய்துகொள்ள வேண்டியதில்லை. அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமாக நான் நினைக்கவில்லை. நான் டெல்லி அணியின் சீனியர் வீரர். நீண்ட காலமாக டெல்லி அணியில் இருந்திருக்கிறேன் என்பதால் நிறைய இளம் வீரர்களை ஏற்கனவே உருவாக்கியிருக்கிறேன். பயிற்சியளிப்பது கடினமான விஷயமெல்லாம் கிடையாது. நமது அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து அவர்களை உருவாக்குவதுதான் என்றார் காம்பீர். 

மிக விரைவில் காம்பீரை பயிற்சியாளராக பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.