ஒவ்வொரு முறையும் டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறாதது, ஆச்சரியமளிப்பதாக முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 4ம் தேதி(வியாழக்கிழமை) ராஜ்கோட்டில் தொடங்குகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அடுத்து வரும் நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆட உள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மனதில் வைத்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு நடைபெறும் என கூறப்பட்டது.

இந்நிலையில், இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான குழு நேற்று வீரர்களை தேர்வு செய்து அறிவித்தது. இங்கிலாந்து தொடரின் போது காயமடைந்த அஷ்வின், கோலி ஆகியோரின் காயம் குணமடைந்ததால் அவர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இங்கிலாந்து தொடரில் சொதப்பிய ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான பிரித்வி ஷா, மயன்க் அகர்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இங்கிலாந்து தொடரில் சொதப்பிய தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்படாத ரோஹித் சர்மா, வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சேர்க்கப்படவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, அதன்பிறகு டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெறவில்லை. கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு ஆசிய கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவிற்கு டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே ரோஹித் ஆட விருப்பம் தெரிவித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ராகுலும் தவானும் சரியாக ஆடாததால், டெஸ்ட் போட்டிகளிலும் ரோஹித்தை ஓபனராக முயற்சிக்கலாம் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் ரோஹித்துக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ரோஹித் சர்மா வேண்டுமென்றே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டப்படுகிறார் என்ற குற்றச்சாட்டை ரசிகர்கள் முன்வைத்துவரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படாதது, ரசிகர்களின் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

இந்நிலையில், ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் சேர்க்கப்படாதது தொடர்பாக முன்னாள் கேப்டன் கங்குலியும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக டுவீட் செய்துள்ள கங்குலி, ஆசிய கோப்பையை வென்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் விதிவிலக்கானவர் ரோஹித். ஒவ்வொரு முறையும் உங்கள் பெயர் டெஸ்ட் அணியில் இடம்பெறாதது ஆச்சரியமளிக்கிறது. ஆனால் நீங்கள் டெஸ்ட் அணியில் இடம்பெறும் காலம் வெகுதொலைவில் இல்லை என பதிவிட்டுள்ளார்.