தான் நல்ல ஃபார்மில் கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்த சமயத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி மகளிர் அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் சவுரவ் கங்குலி. 

மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் தோற்று இந்திய அணி வெளியேறியது. இந்த தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தான்  மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை விளாசி அணியை வெற்றி பெறச்செய்த முன்னாள் கேப்டனும் மூத்த வீராங்கனையுமான மிதாலி ராஜ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் காயம் காரணமாக உட்காரவைக்கப்பட்டார். 

அதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படாமல் உட்கார வைக்கப்பட்டார். நல்ல ஃபார்மில் இருந்து ரன்களை குவித்துவரும் மிதாலி ராஜை முக்கியமான போட்டியில் அணியில் சேர்க்காமல் ஓரங்கட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியதால், மிதாலி ராஜ் நீக்கப்பட்ட விவகாரம் பெரிதாக வெடித்தது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, நான் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு அணியில் சேர்க்கப்படாமல் உட்காரவைக்கப்பட்டேன். அதனால் தான் மிதாலி ராஜ் ஓரங்கட்டப்பட்ட போது “வெல்கம் டு தி குரூப்” என்று கூறினேன். முன்னாள் கேப்டன்களை உட்கார வைக்கின்றனர். நாமும் அதை செய்துவிட்டு போவோம். நான் பைசலாபாத்தில் இதை செய்தேன். அதன்பிறகு 15 மாதங்களுக்கு நான் ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. ஆனால் அதுதான் நான் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த காலம். இது அனைவருக்கும் இயல்பாக நடக்கக்கூடியதுதான். மிகச்சிறந்தவர்களை வெளியேற்றுவதற்காக சில நேரங்களில் கதவு காட்டப்படும் என்று கூறி மிதாலி ராஜுக்கு ஆறுதல் கூறிய கங்குலி, இது மிதாலிக்கு முடிவு அல்ல என்றும் தெரிவித்தார்.