கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சர்வதேச அளவில் சிறந்த அணியாக திகழ்கிறது. எந்த நாட்டிற்கும் சென்று அந்த அணியை வீழ்த்த வல்ல அணியாக உள்ளது. இதுவரை பேட்டிங் அணியாக மட்டுமே இருந்த இந்திய அணி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரின் வருகைக்குப் பிறகு சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது.

கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணியைக் கண்டு சர்வதேச அணிகள் மிரள்கின்றன. தற்போதைய இந்திய அணி, சிறு சிறு தவறுகளை மட்டும் திருத்திக்கொண்டால், கண்டிப்பாக அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்க இருக்கும் உலக கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என ஜாம்பவான்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் இந்த அபரிமிதமான வளர்ச்சி, கோலியால் மட்டுமே வந்துவிடவில்லை. இதற்கு முன்னர் கேப்டன்களாக இருந்த கங்குலி, தோனி ஆகியோர், கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணியை வளர்த்தெடுத்துள்ளனர்.

கங்குலி மற்றும் தோனி ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது. அதிலும் 2003 உலக கோப்பையின் இறுதி போட்டிவரை அழைத்து சென்ற அப்போதைய கேப்டன் கங்குலியின் தலைமையில் இந்திய அணி, சிறப்பான வளர்ச்சியைக் கண்டது.

ஆனால், கங்குலி கேப்டனாக இருந்தபோது பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பலுக்கும் கங்குலிக்கும் கருத்து வேறுபாடும் மோதலும் நீடித்து வந்தன. இருவரும் எதிரும் புதிருமாக செயல்பட்டனர். இருவருக்கும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பிடிக்காது. பரஸ்பரம் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் வெளிப்படையாகவே முன்வைக்கும் அளவுக்கு மோதல் இருந்தது அனைவரும் அறிந்ததே.

அதுதொடர்பாக தற்போது கருத்து ஒன்றை கங்குலி தெரிவித்துள்ளார். என் வாழ்வில் மறக்கவும் மன்னிக்கவும் முடியாத விஷயம் ஒன்று உள்ளது. எந்தவிதமான சரியான காரணமுமின்றி என்னை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது மட்டுமல்லாமல், அணியில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டது. அப்போது எனக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. அந்த சம்பவத்தை நினைத்துக்கூட பார்க்க விரும்பவில்லை என கங்குலி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.