நெருக்கடியை கேதர் ஜாதவ் சிறப்பாக சமாளித்து ஆடுவதாக முன்னாள் கேப்டன் கங்குலி புகழ்ந்துள்ளார். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், பேட்டிங் - பவுலிங் - ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் இந்திய அணி சிறந்து விளங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவான அணியாக திகழ்வதால் உலக கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ள பிரதான அணியாக பார்க்கப்படுகிறது. 

ரோஹித், தவான், கோலி என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உச்சகட்ட ஃபார்மில் உள்ளனர். புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் என பவுலிங் யூனிட் மிரட்டலாக உள்ளது. ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகிய ஆல்ரவுண்டர்களும் உள்ளனர். மிடில் ஆர்டரில் ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த தோனி, ஆஸ்திரேலிய தொடரில் ஹாட்ரிக் அரைசதமடித்து ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ராயுடு, கேதர், தினேஷ் ஆகியோரும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடுகின்றனர். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லாருமே சிறப்பாக ஆடிவரும் நிலையில், எந்த வரிசையில் யாரை இறக்குவது என்பது பெரும் கேள்வியாகவும் குழப்பமாகவும் உள்ளது. அந்த வகையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, போட்டியின் முடிவை மாற்றும் திறன் வாய்ந்த வீரர் கேதர் ஜாதவ். அவர் நெருக்கடியை சிறப்பாக கையாண்டு விளையாடுகிறார். ஆஸ்திரேலியாவில் அவர் நெருக்கடியை சமாளித்து திறம்பட ஆடியதை நம்மால் பார்க்க முடிந்தது. பவுலிங்கும் நன்றாக வீசி சில விக்கெட்டுகளையும் எடுத்து கொடுக்கிறார். 4வது இடத்தில் தோனியையும் 5ம் வரிசையில் கேதர் ஜாதவையும் இறக்கலாம் என்று கங்குலி ஆலோசனை கூறியுள்ளார்.