தோனி எப்போதுமே அபாயகரமான பேட்ஸ்மேன் தான் என முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்திவருகிறது. இளம் வீரர்கள் நிறைந்த இந்திய அணியில் தோனி தான் அனைவரையும் காட்டிலும் சீனியர்.

தோனிக்கு வயதும் 36 ஆகிவிட்டது. கடந்த சில தொடர்களில் (தென்னாப்பிரிக்க தொடர் உட்பட) பேட்டிங்கில் தோனி சோபிக்கவில்லை. தோனி பேட்டிங் சரியாக ஆடாதபோதெல்லாம் அவரது வயதையும் காரணம் காட்டி, அணியில் அவரது இருப்பு குறித்த விவாதங்களை சில முன்னாள் வீரர்கள் முன்னெடுக்கின்றனர்.

சச்சினும் இதே பிரச்னையை எதிர்கொண்டார். இறுதியில் 2011 உலக கோப்பையை வென்றவுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். அதேபோலத்தான் தோனியும்.. 2019ம் ஆண்டு உலக கோப்பை அணியில் ஏற்கனவே உலக கோப்பையை வென்ற தோனி இடம்பெறுவது அவசியம். தோனியின் அனுபவம், ஆலோசனை இந்திய அணிக்கு தேவை.

பேட்டிங்கில் சோபிக்கவில்லை என்றாலும் தற்போது வரை இந்திய அணியின் வெற்றிக்கு தோனியின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்களை வழிநடத்துவதிலும் ஆலோசனைகளை வழங்குவதிலும் தோனி வல்லவர். இந்திய அணியில் அவ்வளவு எளிதாக வேறு யாரும் பூர்த்தி செய்துவிட முடியாது.  

தோனியின் பேட்டிங் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக ஆடி மிரட்டினார் தோனி. 28 பந்துகளில் 52 ரன்களை குவித்து அணியின் ரன் குவிப்பிற்கு உதவினார். கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகல் என 17 ரன்களை தோனி குவித்தார்.

தன் மீதான விமர்சனங்களுக்கு மீண்டுமொருமுறை பேட்டிங்கால் பதிலடி கொடுத்தார் தோனி.

இந்நிலையில், தோனியின் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, தோனி ஒரு ஆபத்தான பேட்ஸ்மேன் என நான் தொடர்ந்து கூறிவந்துள்ளேன். அது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தோனி அபாரமாக பேட்டிங் செய்தார். இதே அதிரடி இனிவரும் போட்டிகளிலும் தொடரும் என நம்புகிறேன் என கங்குலி தெரிவித்தார்.