இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி என்றாலே கெத்துதான். அதனால்தான் அவர் தாதா என்று அழைக்கப்படுகிறார். வம்பிழுக்கும் எதிரணி வீரர்களுக்கு பதிலடி கொடுப்பதாக இருக்கட்டும், தன்னை சீண்டுபவர்களை மறுபடியும் இவரிடம் வைத்துக்கொள்ளக்கூடாது என நினைக்கும் அளவிற்கு வைத்து செய்வதாகட்டும், அனைத்திலும் கங்குலிக்கு நிகர் கங்குலி தான்.

கங்குலியிடம் வம்பு இழுத்து வாங்கிக் கட்டிக்கொண்டவர்கள் அதிகம். அந்த வரிசையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுப்பை(முன்பு யூசுப் யோகானா) ஒருமுறை கங்குலி வெளுத்து வாங்கிவிட்டார். 

2005ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில், பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த யூசுப் திடீரென காயம் ஏற்பட்டதாகக் கூறி தரையில் அமர்ந்துகொண்டார். அவரை மருத்துவ நிபுணர்கள் சோதித்து கொண்டிருந்தனர். இதனால் நேர விரயம் ஆனது. 

இதை அவர் வேண்டுமென்றே செய்தாரா? அல்லது உண்மையாகவே காயமா? என்பது ஒருபுறமிருக்க, இதனால் பந்துவீச தாமதித்தாக கூறி கடைசியில் இந்திய அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் சுதாரித்துக்கொண்ட கங்குலி, யூசுப் விரயமாக்கும் நேரத்தை குறித்துக்கொள்ளும்படி அம்பயரிடம் கூறினார். 

உடனே நான் என்ன வேண்டுமென்றா செய்கிறேன்? என யூசுப் கேட்க, நீங்கள் வேண்டுமென்றே செய்கிறீர்கள் என்று நான் கூறினேனா? நான் என்னைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் நேரவிரயம் செய்வதால் கடைசியில் எங்களுக்கு அபராதம் விதித்தால் என்ன செய்வது? அது நடக்கக்கூடாது என்பதற்காக கூறினேன். நீங்கள் வேண்டுமென்றே செய்கிறீர்கள் என்று கூறவில்லை என கெத்தாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.