விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதி போட்டியில் ஹரியானா அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

விஜய் ஹசாரே தொடரில் மும்பை, மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, ஹைதராபாத், பீகார், ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய 8 அணிகளும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

பெங்களூருவில் இன்று இரண்டு காலிறுதி போட்டிகள் நடந்தன. மும்பை மற்றும் பீகார் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பீகார் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

மற்றொரு போட்டியில் டெல்லி மற்றும் ஹரியானா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹரியானா அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஹரியானா அணியின் சைதன்யா பிஷோனி மற்றும் பிரமோத் சண்டிலா ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

சைதனியா 85 ரன்களும் பிரமோத் 59 ரன்களும் குவித்தனர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் ஹரியானா அணி 229 ரன்கள் எடுத்தது. 

230 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கவுதம் காம்பீர், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். அபாரமாக ஆடிய காம்பீர், சதம் விளாசினார். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, இந்திய அணிக்காக நீண்டகாலமாக ஆடாமல் இருந்தாலும் காம்பீர் இன்னும் நல்ல ஃபார்மில் இருப்பதை தனது பேட்டிங்கின் மூலம் நிரூபித்தார்.

அபாரமாக ஆடி சதமடித்த காம்பீர், 72 பந்துகளில் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். துருவ் ஷோரே அரைசதம் அடித்து அவுட்டானார். ராணா 37 ரன்கள் எடுத்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் டெல்லி அணி 40வது ஓவரிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதையடுத்து மும்பை அணிக்கு அடுத்தபடியாக டெல்லி அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.